செம்மஞ்சேரியில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற வடமாநில நபர் கைது: 11 கிலோ பறிமுதல்
ganja seller arrested in semmanjeri
சென்னை செம்மஞ்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சாவை பொட்டலம் போட்டு விற்பனை செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி உதவிக்கமிஷனர் ரியாசுதீன் தலைமையில், பெரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் நடராஜ், எஸ்ஐ வெங்கடேசன், காவலர்கள் அருண், நாகராஜ், கவுதமன் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய பகுதியில் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர் வாகனத்தில் வந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மணிராம் என்பதும் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதற்குள் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் மற்றும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சாவை பதுக்கி வைத்து சிறு சிறு பொட்டலங்கலாக போட்டு விற்று வந்ததாக அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தார். அதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருக்கப்பட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 11 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.