செம்பியம் வண்ணாரப்பேட்டை காவல் அதிகாரிகளை பாராட்டிய கமிஷனர் சங்கர்ஜிவால்
Commissisoner shankar jiwal gave reward chembium and vannarpet police
சென்னை செம்பியம் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
சென்னை, பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த ஜாவித். அங்குள்ள மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 30.04.2022 அன்று மாலை ஜாவித் கடையிலிருந்தபோது, கடையில் துணிகள் எடுப்பது போல வந்த 3 நபர்கள் திடீரென கத்தியை காட்டி ஜாவித்தை மிரட்டி துணிகளை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அது தொடர்பாக செம்பியம் போலீசார் ஜாவித் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களைப் பிடிக்க செம்பியம் சரக உதவி ஆணையாளர் செம்பேடு பாபு இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் முருகன், முதல்நிலைக் காவலர்கள் அஸ்கர் அலி, சிவகுமார், முத்துகிருஷ்ணன் மற்றும் காவலர் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் கடைக்கு வெளிப்புறங்களில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதனையடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட .கலை (எ) கலைச்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
அதே போல வண்ணாரப்பேட்டை பகுதியில் உதவிக்கமிஷனர் சங்கர், தலைமைக் காவலர்கள் மணிகண்டன், சதிஷ்குமார், முதல்நிலைக் காவலர்கள் ஷேக் முகமது, சிவபால கணேஷ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 16.04.2022 அன்று மூலக்கொத்தளம், C.B. ரோடு, இருப்புப்பாதை பாலம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அய்யன்னா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த செம்பியம் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (14.05.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.