Take a fresh look at your lifestyle.

சென்னை மாம்பலத்தில் 414 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: இருவர் கைது

110

சென்னை, மாம்பலம் பகுதியில் வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 414 கிலோ 320 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ. 63,540- மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற ஆபரேஷனை செய்து வருகிறார். அதன் மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த (29.04.2022) மதியம் தி.நகர், சித்தி விநாயகர் கோயில் தெரு என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்தனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி இடத்தில் குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரில்வான் (22), சென்னை திருவல்லிக்கேணி தமீமுல் அன்சாரி (24) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 414 கிலோ 320 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ.63,540/- மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யபட்ட தமீமுல் அன்சாரி மீது ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் குட்கா வழக்கு உள்ளது தெரிவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.