சென்னை மண்ணடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த 9 சாமி கற்சிலைகள் மீட்பு: சிலைதிருட்டுத் தடுப்புப்பிரிவு அதிரடி
300 years old idols seazed in mannadi; chennai idol wing police action
சென்னை, ஆக. 4–
சென்னை மண்ணடியில் வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 பழமை வாய்ந்த பல கோடி மதிப்புள்ள சாமி கற்சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, மண்ணடி. பிடாரியார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் இருந்து, பழங்கால கோவில் சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி தினகரன், எஸ்பி ரவி தலைமையில் டிஎஸ்பிக்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், செல்வி, வசந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள பமீலா இமானுவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையிட்டு விசாாரணை நடத்தினர்.
அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. பமீலா இமானுவேலின் கணவர் மானுவல் ஆர் பினிரோ மீது சிலைக்கடத்தல் தொடர்பாக வழக்குகள் உள்ளதும் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதும் தெரியவந்தது. அவர் இறப்பிற்குப் பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்த முடியாத சில சிலைகள் அந்த வீட்டுக்குள் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வீட்டுக்குள் இருந்து முதற்கட்டமாக தட்சிணாமூர்த்தி சிலையை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல இடங்களில் ஜல்லடை போட்டு தேடிய போது அங்கு மேலும் 8 பெண் தெய்வ கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன. சிலைகளின் விவரம் மற்றும் சிலைகளின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சிலைகளை வைத்திருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. கோவில் வளாகத்தில் சிலைகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிலைகளின் அடிப்பகுதியில் நீட்டிப்பு இருந்ததால் அவை கோவில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அதனையடுத்து 9 கற்சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள் , சிலையை திருடிய குற்றவாளிகள் மற்றும் அவற்றின் தொன்மை குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் தொன்மைத்தன்மை குறித்து சிற்ப வல்லுநர் ஸ்ரீதரன் நடத்திய ஆய்வில் ஒன்பது சிலைகளில் ஏழு சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையானவை என்றும் அவை பலகோடி மதிப்புள்ளவை என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழுவிடம் தெரிவித்துள்ளார். பழங்கால சிலைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை டிஜிபி சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.