5 ஆயிரம் மாணவர்களை சிற்பி திட்டத்தின் கீழ் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற தற்காக சென்னை நகர காவல்துறையை பாராட்டி வேர்ல்ட் யூனியன் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் உலக சாதனை சான்றிதழை கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக 5,000 சிற்பி மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நேற்று முன்தினம் காலை, எழும்பூரிலிருந்து ரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் சிற்பி மாணவ, மாணவிகளின் இயற்கையுடனான கல்வி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து, ரயில் பயணத்தை துவக்கி மாணவிகளை வழியனுப்பி வைத்தார். வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து சிற்பி திட்டத்திலுள்ள 5,000 மாணவ, மாணவிகள் பேருந்துகள் மூலம் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு செல்லப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை குறித்தும், காவல் அதிகாரிகள் மற்றும் அளிநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், காவல்துறையின் பணிகள், கடமைகள், சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனையடுத்து கல்வி சுற்றுலாவின் பயணம் இனிதே முடிந்து நேற்று மாலை மாணவ, மாணவிகள் வண்டலூரில் இருந்து ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற, கல்வி சுற்றுலாவின் நிறைவு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சிற்பி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும், கல்விச் சுற்றுலாவின் அனுபவம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்து, அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார். சுற்றுலாவில் 5,000 மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவாக ரயில் மூலம் அழைத்துச் சென்றதற்காக World Union Records அமைப்பினர் சென்னை பெருநகர காவல்துறைக்கு உலக சாதனை சான்றிதழை வழங்குவதாக அறிவித்தனர். அதன்பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த உலக சாதனை சான்றிதழை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே ஏடிஜிபி வனிதா, சென்னை பெருநகர காவல் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி, துணைக்கமிஷனர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.