சென்னை பூக்கடையில் பஸ்சில் பயணிகளிடம் செல்போன்களை அபேஸ் செய்து அவற்றை பர்மாபஜார் வியாபாரிகளிடம் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள் மீட்கப்பட்டன.
சென்னை, மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 22). சென்னையை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் தனியார் ஓட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பார்ட் டைம் வேலை செய்து வந்தார். கடந்த 12.9.22 அன்று மாலை சுமார் 6.15 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் வீடு திரும்பினார். மாநகர பஸ்ஸிலிருந்து சென்னை வடக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ராஜாஜி சாலையில் இறங்க முயன்றார். அப்போது பஸ்சில் இருந்த மூன்று பேர் ராஜதுரையை இடித்தபடி வந்தனர். அவர்களை கவனித்த வேளையில் மற்றொரு நபர் ராஜதுரையின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு அங்கிருந்து நழுவி விட்டார். மற்ற இரண்டு நபர்களும் தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் ராஜதுரை புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமாரா பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் மூலம் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாலு (வயது 33), சத்யா என்கிற லொடுக்கு சத்யா (26) ஆகிய இருவரையும் போலீசார் மெரினா பீச்சில் வைத்து கைது செய்தனர்.
வரலாற்றுப்பதிவேட்டு ரவுடிகளான இவர்கள் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் செல்போனை லவட்டுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதும் திருடிய செல்போன்களை பர்மா பஜாரில் உள்ள வியாபாரிகளிடம் புரோக்கர்கள் மூலம் விற்று விடுவதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருட்டு செல்போன்களை வாங்கிய பர்மா பஜாரில் கடை நடத்தி வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 55) மற்றும் இந்த சம்பவத்தில் புரோக்கராக செயல்பட்டு வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த சையத் என்கிற கோலி (வயது 36) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள் மீட்கப்பட்டன. விசாரணைக்குப் பிறகு கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.