சென்னை, பாண்டிபஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வஜா (19). கடந்த 19.07.2022 அன்று இரவு, தி.நகர், பாரி தெருவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பூர்வஜா கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த வசந்த பிரியன் (36) என்பவரை 21ம் தேதியன்று கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவான எதிரி மனோஜ் (எ) மனோஜ்குமார் (28) என்பவரை இன்று (22.07.2022) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ்குமார், விசாரணைக்குப் பின்னர், இன்று (22.07.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
*****