சென்னை பரங்கிமலையில் பயங்கர விபத்து ராட்சத பெயர் பலகை மீது மாநகர பஸ் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
road accident in chennai st thomas mount
பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி 70வி மாநகர பஸ் இன்று மதியம் 3 மணியளவில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பஸ் அதிவேகமாக வந்த போது சாலை வளைவில் இருந்த ராட்சத வழிகாட்டி பெயர் பலகை கம்பத்தின் மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பெயர் பலகை பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, அங்கு பயணம் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பலகை விழுந்ததால் அதில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் ராட்சத பெயர் பலகையின் அடியில் மாட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கி கவிழ்ந்த மினி வேன் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பொதுமக்கள் மீட்டனர்.
தகவல் கிடைத்ததும் செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தில் சிக்கியவர் சைதாப்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பது தெரியவந்தது. மற்றொருவர் யார் என தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புனித தாமஸ்மலை போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ரகுநாத், கண்டக்டர் சின்னையா ஆகியோரை கைது செய்தனர்.