சென்னை நகர சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்: சங்கர்ஜிவால் முன்னிலையில் அமைச்சர் மா.சு. துவங்கி வைத்தார்
TN Health Minister inaugurated Happy streets Programme at Anna Nagar
சென்னை அண்ணாநகர் பகுதியில் மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” (Happy Streets) நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கமிஷனர் சங்கர்ஜிவால் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 8 இடங்களில் ஒரு வருட நிகழ்ச்சியாக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” (Happy Streets) என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு அண்ணாநகர் 2வது அவென்யூ, OMR, ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, காந்தி நகர் 4வது பிரதான சாலை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் சாலை, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலை, கீழ்ப்பாக்கம், ஆர்ம்ஸ் சாலை, கே.கே.நகர், லட்சுமணன் சாமி சாலை, மற்றும் காமராஜர் சாலை ஆகிய 8 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 6 மணி முதல் 9 மணி வரை, போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு 3 மணி நேரம் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் ஐந்து வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முதல் நாள் ஹேப்பிஸ்ட்ரீஸ் (Happy Streets) நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (17.07.2022) காலை 6 மணியளவில் சென்னை, அண்ணாநகர் 2வது அவென்யூவில் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் -நோக்கங்கள் தொடர்பான பாட்டு, இசை நிகழ்ச்சி, ஏரோபிக்ஸ், ஜூம்பா, யோகா, சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், சாக் ரேஸ், கயிறு இழுத்தல், டிராம்போலைன், கைப்பந்து, பூப்பந்து, டார்ட் போர்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், தென்சென்னை போக்குவரத்து இணைக்கமிஷனர் ராஜேந்திரன், சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
வருகின்ற ஞாயிற்றுகிழமைகளில் ஹேப்பிஸ்ட்ரீட்ஸ் (Happy Streets) நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு சென்னை நகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.