சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 நபர்கள் கைது செய்யப்பட்டு 18 கிலோ 694 கிராம் குட்கா, 68.62 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 1.1.2023 முதல் 7.1.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 கிலோ 694 கிராம் குட்கா புகையிலைப்பொருட்கள் மற்றும் 68.62 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடும்படியாக திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 04.01.2023 அன்று திருவொற்றியூர், கிராம தெரு, இரயில்வே கேட் அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருவொற்றியூர் கண்ணன் (38), அழகுராஜன் (55) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 7.1 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல புனித தோமையர் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 4.1.2023 அன்று ஆலந்தூர், எம்.கே.என் ரோட்டில் கண்காணித்து, அங்கு குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆதம்பாக்கம் ஸ்ரீராக் (33) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ 335 கிராம் குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் வசிக்கும் பொது மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், காவல் துறையின் 24 மணி நேர உதவி குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் இது போன்ற கலந்தாய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.