Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் 7 நாள் ரெய்டில் 104 பேர் கைது: 74 கிலோ குட்கா பறிமுதல்

105

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 நபர்களை போலீசார் கைது செய்தனர். 74 கிலோ 95 கிராம் குட்கா, 2.27 கிலோ மாவா, ரொக்கம் ரூ. 1920- மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில்,, இணை ஆணையாளர்கள் ஆலோசனை யின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாள ர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப் பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 22.01.2023 முதல் 28.01.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 74 கிலோ 95 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், 2.27 கிலோ மாவா, ரொக்கம் ரூ.1,920, மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குறிப்பிடும்படியாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 24.01.2023 அன்று புது வண்ணாரப்பேட்டை, எஸ்.என். செட்டி தெருவில் கண்காணித்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த புது வண்ணாரப்பேட்டை கோபாலகிருஷ்ணன் (48) வராஜ் என்பவரை கைது செய்தனர். மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு 33.04 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், கூலிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள்மற்றும் 1 ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 25.01.2023 அன்று வேளச்சேரி, காந்தி ரோட்டிலுள்ள ஒரு கடையில் கண்காணித்தபோது, அங்கு ரகசியமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வேளச்சேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், எம்.டி.எம்., கூலிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ. 1,320 பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.