Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் 7 நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 வழக்குகள் பதிவு

in 7 days 28 kg ganja seazed in chennai

127

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 29 கிலோ 570 கிராம் கஞ்சா, 1,215 வலி நிவாரண மாத்திரைகள், 15 LSD ஸ்டாம்புகள், 4 செல்போன்கள் மற்றும் ரூ. 1,190- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.05.2022 முதல் 19.05.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 29 கிலோ 570 கிராம் கஞ்சா, 1,215 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 15 LSD ஸ்டாம்புகள், 04 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.1190 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 13.05.2022 அன்று காலை, வேளச்சேரி, நேருநகர், மதியழகன் தெருவில் கண்காணித்தபோது, அங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த திரிபுராவைச் சேர்ந்த மாசுக்மியா, ஜாகிர் உசேன், அனோவர் உசேன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 14.05.2022 அதிகாலை சுமார் 3 மணியளவில், துரைப்பாக்கம், 200 அடி சாலை சுங்கச்சாவடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சந்தன்தாஸ், தேப்நாத், அபுல்காசிம், சுதீப் தேப்நாத், ரபீந்திரா தேப்நாத், ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டையார்பேட்டை போலீசார் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த சூர்யா, ராஜ்குமார் சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 Nitravet, 1,100 Tydol வலி நிவாரண மாத்திரைகள் என மொத்தம் 1,205 வலி நிவாரண மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.220 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.