Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் 7 நாட்களில் 51 கிலோ குட்கா சிக்கியது: 43 வழக்குகளில் 46 பேர் கைது

7 days raid 51 kg gutka seazed in chennai

70

சென்னை நகரில் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 51.57 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 7. 86 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 19.06.2022 முதல் 25.06.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 51.57 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 7.86 கிலோ எடை கொண்ட மாவா, 2 செல்போன்கள், 1 ஆட்டோ மற்றம் ரொக்கம் ரூ.9,120/- பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.06.2022 காலை, வடபழனி, ஆற்காடு சாலையில் 2 நபர்கள் 1 ஆட்டோவில் இருந்து மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் அருகில் சென்று விசாரணை செய்தபோது, ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில், சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த சாலிகிராமம் அண்ணாதுரை (46), திநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரான்சிஸ் சேவியர் (49) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46.6 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், வி1, எம்.டி.எம், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 2 செல்போன்கள், 1 ஆட்டோ மற்றும் ரொக்கம் ரூ.190/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, 21.06.2022 அன்று மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கபாலி தோட்டம் பகுதியில், ரகசியமாக மாவா விற்பனை செய்த மயிலை ரகு (40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட மாவா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 24.06.2022 அன்று சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமியார் தோட்டம் பகுதியில் ரகசியமாக மாவா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சைதாப்பேட்டை லட்சுமி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட மாவா மற்றும் ரொக்கம் ரூ.8.470/- பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.