சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற் சிற்ப கண்காட்சியை கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்.
இன்று ஜுன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று காலை, சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை பின்புறம் உள்ள மணற்பரப்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மணற் சிற்பங்கள் கண்காட்சியை திறந்து வைத்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சாந்தோம், ICAT வடிவமைப்பு மற்றும் ஊடக கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட போதை பொருள் ஒழிப்பு குறித்த பெரிய மணற் சிற்ப கண்காட்சியை சங்கர்ஜிவால் திறந்து வைத்தார். பின்பு மாணவர்கள் நடித்த போதைக்கு எதிரான மவுன நாடகம் மற்றும் மீம்ஸ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
மேலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூன் மற்றும் சிறிய பலூன்களை பறக்கவிட்டு கமிஷனர் சங்கர்ஜிவால் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை ஒழிப்பு குறித்தும் ஓவிய போட்டிகள் மற்றும் சிறந்த வாசகங்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும் என கமிஷனர் சங்கர்ஜிவால் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு மண்டல இணைக் கமிஷனர் பிரபாகரன், வடசென்னை இணைக்கமிஷனர் ரம்யா பாரதி, மயிலாப்பூர் துணைக்கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.