Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் புத்தாண்டு விதிமீறல்: 932 வாகனங்கள் பறிமுதல்

110

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 360 வாகனங்களும், இதர போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 572 வாகனங்களும் என மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியமாக புத்தாண்டு கொண்டா ட்டத்தின் போது கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று (31.12.2022) (சனிக்கிழமை) இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டு பவர்களை தடுக்கவும் சென்னை பெருநகர காவல் 12 மாவட்டங்களில் மொத்தம் 368 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் சட்டம் & ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ரோந்து வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. விழிப்புணர்வுக்காக அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் தற்காலிகமாக போலீஸ் கூடாரங்கள் அமைத்தும், ரோந்து வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 33 மேம்பாலங்கள் தற்காலிக தடுப்புகள் மூலம் மூடப்பட்டது. மேலும் முக்கிய இடங்களில் தற்காலிகமாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களில் விரைந்து மருத்துவ உதவி அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

காவல் குழுவினர் நேற்று (31.12.2022) இரவு 13,036 வாகனங்களை சோதனை செய்து, இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய (Drunken Drive) குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, 360 வாகனங்களும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் (Without Helmet), இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் (Triples Ride), இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் (Over Speed & Dangerous Drive) போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 572 வாகனங்கள் என மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பெருநகர காவல் துறையினர் கடந்த 25.12.2022 முதல் 30.12.2022 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்திய வாகன சோதனையில் இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.