Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 14 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் பாராட்டு:

92

சென்னை நகரில் வழிப்பறி மற்றும் பேோதைப் பெொருள் கடத்தல் ஆசாமிகளை கைது செய்வதில் சிறப்பாக பணிபுரிந்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* கஞ்சா எண்ணெய் கடத்தல் ஆசாமிகளை பிடித்த தலைமைச் செயலக குடியிருப்பு காவல் குழுவினர்:

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், தலைமைக் காவலர்கள் சரவணகுமார், ராஜேஷ், ஜெயகுமார், சந்திரன், பிரதீப் முதல் நிலைக்காவலர் மகேஷ்வரன், இரண்டாம் நிலைக்காவலர் சத்யராஜ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 17.03.2022 அன்று மாலை அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பு அருகே ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 நபர்களை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் Hashish எனப்படும் கஞ்சா எண்ணெய் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை, செங்குன்றம், காந்திநகரைச் சேர்ந்த விஜயகுமார் (37), அழகுராஜா (34) ஆகிய இருவர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ Hashish பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெல் போன்ற நிலையில் இருக்கும் கஞ்சா எண்ணெய் எனப்படும் Hashish கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுவதும், அதனை நேபாளத்திலிருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது.

* கொடுங்கையூரில் எபிடரின் விற்பனை செய்த நபர்களை மடக்கிய காவல் குழுவினர்

வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யாபாரதி தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் விஜய், முதல் நிலைக்காவலர் சதாசிவம், இரண்டாம் நிலைக்காவலர் முகமது காட்டுபாவா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சரத்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 19.03.2022 அன்று, கொடுங்கையூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு எபிட்டிரைன் என்ற போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த மணிகண்டன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மணிகண்டனிடம் 10 கிலோ எபிட்டிரைன் போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது.

*  மெரினா கடற்கரையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்த ஆயுதப்படை காவலர்கள்

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை, பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராகேஷ் (வயது 19). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று (20.03.2022) மதியம் 01.30 மணியளவில் மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 நபர்கள் ராகேஷ் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். ராகேஷ் உடனே அருகில் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர்கள் ராஜசேகர், சரவணக்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே காவலர்கள் விரைந்து செயல்பட்டு மெரினா கடற்கரையில் தேடுதல் வேட்டை நடத்தி செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய 2 நபர்களை மடக்கிப்பிடித்து இருவரையும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர்.

அண்ணா சதுக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் பிடிபட்ட நபர்கள் துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த பிரபாகரன் (27), சென்னை பாரதிசாலையைச் சேர்ந்த பாலாஜி (24) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மீட்கப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால் இன்று (21.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.