சென்ன நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சாலையில் கிடந்த பணம், நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள் மற்றும் ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பின் வரும் சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
1. மதுரவாயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன்கள் திருடிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது. 7 செல்போன்கள் பறிமுதல்.
சென்னை, மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசிக்கும் கோபி, வ/38, த/பெ.தேவன் என்பவர் கடந்த 20.09.2022 அன்று மதியம் மதுரவாயல் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, ஒரு நபர் கோபி சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது, கோபி சுதாரித்துக் கொண்டு செல்போனை பிடித்து கொள்ளவே, அந்த நபர் ஓடினார். உடனே, கோபி சத்தம் போட்டபோது, சற்று அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.P.சீனிவாசன் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.P.மணிகண்டன் (மு.நி.கா.37663) ஆகியோர் துரத்திச் சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் வெங்கடேஷ், வ/30, த/பெ.ஜெகநாதன், கொக்கரம், சஞ்சீவ் நகர், ஆந்திர மாநிலம் என்பதும், வெங்கடேஷ் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து, மாநகர பேருந்தில் சென்றும், பேருந்து நிறுத்தத்தில் நோட்டமிட்டும், பயணிகளின் செல்போன்களை திருடிச் சென்று, பின்னர் ஆந்திரா செல்வதும் தெரியவந்தது. அதன்பேரில் மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரி வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. தரமணி பகுதியில் காதலியிடம் தன்னை பற்றி தவறாக கூறிய நபரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது. இளஞ்சிறார் பிடிபட்டார்.
சென்னை, தரமணி, வடக்கு கே.பி.கே.நகர், 1வது தெருவில் வசிக்கும் நாகராஜ், வ/21, த/பெ.மகேந்திரன் என்பவர் கடந்த 23.09.2022 அன்று விடியற்காலை சுமார் 06.00 மணியளவில், வீட்டினருகே, வடக்கு கே.பி.கே.நகர் நுழைவாயில் அருகே நடந்து சென்றபோது, 3 நபர்கள் நாகராஜை வழிமறித்து, தகராறு செய்து, கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து நாகராஜ் கொடுத்த புகார் மீது J-13 தரமணி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தரமணி காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ஐசக் ஆல்பர்ட் ராயப்பா, மகேஷ் மற்றும் ஊர்க்காவல் படைக்காவலர் புருஷோத்தமன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மகேந்திரகுமார், ரமேஷ் (எ) பவர் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறாரை பிடித்து விசாரணை செய்தனர். மேற்படி நபர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
விசாரணையில், நாகராஜ் எதிரி மகேந்திரகுமார் என்பவரின் நடத்தை சரியில்லை என, மகேந்திரகுமாரின் காதலியிடம் கூறியதால் ஆத்திரமடைந்த மகேந்திர குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளதும், சம்பவத்தன்று (23.09.2022) காலை மகேந்திரகுமார், அவரது நண்பர்கள், ரமேஷ் மற்றும் 17 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து நாகராஜை வழிமறித்து தகராறு செய்து, கத்தியால் தாக்கியதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், எதிரி ரமேஷ் (எ) பவர் ரமேஷ் J-13 தரமணி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 14 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், இவர் ஏற்கனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
3. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த குற்றவாளியை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்த குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்.
மதுரை பாலா (எ) பாலமுருகன், வ/30, த/பெ.ராமமூர்த்தி, தென்னேரி, பல்லாவரம் என்பவர் குற்ற வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருந்து வருகிறார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மதுரை பாலா (எ) பாலமுருகன் நீதிமன்ற விசாரணைக்காக கடந்த 05.09.2022 அன்று மதியம் சுமார் 03.00 மணியளவில், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, வேலூர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.செல்வன் (எண்.3572) தலைமையில் காவலர்கள் திரு.P.பாரதி (கா.2381), திரு.D.பிரசாந்த் (கா.3146), திரு.P.வெங்கடேசன் (கா.285) அடங்கிய காவல் குழுவினருடன் வழிக்காவலாக அழைத்து வந்து, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தின் வெளியே நின்றிருந்தனர்.
அப்பொழுது, சுமார் 5 நபர்கள் மேற்படி பாலமுருகனுடன் வந்திருந்த பாதுகாப்பு காவல் குழுவினர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, கத்தியால் பாலமுருகனை தாக்கினர். உடனே காவல் குழுவினர் சுதாரித்துக் கொண்டு தடுத்த போது, ஒரு காவலருக்கு கத்தியால் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே, அந்த நபர்கள் தப்பியோடவே, மேற்படி வேலூர் ஆயுதப்படை காவல் குழுவினர், அங்கு வழிக்காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் திரு.N.நெடுமாறன் (த.கா.21045), காவலர் திரு.M.ராஜேஷ்வரன் (கா.47080), முதல்நிலை பெண் காவலர் லோகேஸ்வரி, பெண் காவலர்கள் சரிதா பொன்மாரி ஆகியோர் துரத்திச் சென்று 3 நபர்களை கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே பாட்டிலுடன் மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில் கோட்டூர்புரம் ரோந்து காவல் குழுவினர் பிடிபட்ட 3 நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் சக்திவேல், அருள்பிரசாத், .அப்துல் மாலிக் என்பதும், மேற்படி எதிரிகள் மேலும் 2 நபர்களுடன் சேர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வரும் மதுரை பாலா (எ) பாலமுருகனை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே பாட்டில்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் வெளியே காத்திருந்து பாலமுருகனை கொலை செய்ய முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மேற்படி எதிரிகள் மூவரையும் கைது செய்தனர்.
4. திருவொற்றியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி தவறவிட்ட தங்கநகைகள் மற்றும் பணம் அடங்கிய கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூர்த்தி என்ற நபருக்கு பாராட்டு.
சென்னை, தண்டையார்பேட்டை, கே.ஜி.கார்டன் பகுதியில் வசிக்கும் மூர்த்தி செல்வம் என்பவர் கடந்த 23.09.2022 அன்று மதியம் திருவொற்றியூர் நோக்கி ஆட்டோவில் செல்லும்போது, லஷ்மி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே தனக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி அவர் வைத்திருந்த பெரிய கட்டைப்பையை சலையில் தவறவிட்டுச் சென்றார். உடனே, மூர்த்தி அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் பெண்கள் கைப்பை, சுமார் 5 சவரன் தங்க நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. உடனே, மூர்த்தி அந்த பையை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரங்கள் கூறினார்.
காவல் குழுவினர் விசாரணை செய்ததில், மேற்படி பையின் உரிமையாளர் பத்மாவதி, பெ/வ.40, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் என்பது தெரியவந்ததின்பேரில், பத்மாவதியை வரவழைத்து, ஆவணங்கள் சரிபார்த்து, மேற்படி தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய பை பத்மாவதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தங்கநகை, பணம் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்க உதவிய மூர்த்தி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (12.10.2022) நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.