சென்னை நகரில் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க ரூ. 1.17 கோடி நிதி ஒதுக்கீடு: கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை நகரில் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க ரூ. 1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து மண்டலங்களில் சிசிடிவி கேமராக்கள் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, அவைகள் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டு சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவற்றில், கிழக்கு மண்டலத்தில் 3856 சிசிடிவி கேமராக்களும், மேற்கு மண்டலத்தில் 639 சிசிடிவி கேமராக்களும், வடக்கு மண்டலத்தில் 1815 சிசிடிவி கேமராக்களும், தெற்கு மண்டலத்தில் 4817 சிசிடிவி கேமராக்களும் மற்றும் போக்குவரத்து மண்டலத்தில் 1228 சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்த நிலையில் இருந்தமையால், மொத்த பழுதடைந்த நிலையில் உள்ள 12355 சிசிடிவி கேமராக்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வதற்கு 2021 – -2022-ம் நிதி ஆண்டில், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு தலைப்பின்கீழ் ரூ. 1 கோடியே 17 லட்சத்து 37, 250- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையானது, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து மண்டலங்களுக்கும் பழுதுகள் சரி செய்யும்பொருட்டு பிரித்து வழங்கி சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.