சென்னை ஜெஜெ நகரில் கஞ்சா கடத்திய ரவுடி காருடன் கைது 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ganja accused arrested in chennai jj nagar
சென்னை, ஜெ.ஜெ.நகர் அருகே கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4.1 கிலோ கஞ்சா, 1 கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் 4 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை நகர மேற்கு மண்டலத்தில் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில், அண்ணாநகர் துணைக்கமிஷனர் தலைமையில் சென்னை ஜெஜெ நகர் போலீசார் நேற்று (13.06.2022) காலை, முகப்பேர் தொழிற்பேட்டை, தனியார் வாட்டர் கம்பெனி அருகில் கண்காணித்தனர். அப்போது, அங்கு 4 நபர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க ஓடிச் சென்றனர். அப்போது, 4 நபர்களும் தப்பியோடினர். போலீசார் விரட்டிச் சென்று ஒரு நபரை பிடித்தனர். மற்ற 3 நபர்களும் தப்பியோடிவிட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த வின்சென்ட் (வயது 26) என்பதும் தப்பியோடிய நபர்கள் வின்சென்ட்டின் நண்பர்கள் மூர்த்தி, மணி மற்றும் டப்பா கார்த்திக் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து ரகசியமாக விற்னை செய்து கொண்டிருந்துள்ளனர். வின்சென்ட்டை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4.1 கிலோ கஞ்சா, 1 கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் 4 கிராம் தங்க கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் பிடிபட்ட வின்சென்ட் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட சுமார் 3 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் வின்சென்ட் நேற்று (13.06.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தப்பியோடிய மற்ற 3 நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.