சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இயற்கை விவசாயப் பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கட்டு பாட்டிலுள்ள, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இன்று (8 ந் தேதி) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தி யாளயர்களிடம் தெரிவித்ததாவது: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் சுமார் 71.65 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டு கடந்த 1996 டிசம்பர் முதல் செம்மையுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் காய்கறி வணிகத்திற்காக 1985 கடைகளும், கனிகளின் வணிகத்திற்காக 992 கடைகளும், மலர் வணிகத்திற்காக 472 கடைகளும், உணவு தானிய வணிகத்திற்காக 492 கடைகளும் ஆக மொத்தம் 3941 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் வெள்ளிவிழா ஆண்டை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இவ்வளாகத்தினை நவீனமயமாக்குவதற்கு ரூ.20 கோடியை ஒதுக்கீடு செய்தது. அதன்படி நவீனமயமாக்குதலுக்கான முன்-சாத்திய அறிக்கையை தயாரிப்பதெற்கென ஆலோசகர் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாக போக்குவரத்து நிர்வாக குழு அமைக்கப்பட்டு, முதற்கட்டமாக 18 ம் நுழைவு வாயிலில் பழ அங்காடி அருகே பூம் பேரியர் (Boom Barrier) நுழைவு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இது அடுத்த கட்டமாக மற்ற அங்காடிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி அமைப்பது தொடர்பாக தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையினரிடம் கருத்துரு பெறப்பட்டு இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.