Take a fresh look at your lifestyle.

சென்னை கடற்கரையில் கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்: கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

39

சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவில் கண்கவர் சலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு இடம் பெற்றிருந்தது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சென்னையில் வழக்கமாக, மெரினா காந்தி சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெறும். அப்பகுதியில் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், இந்த முறை உழைப்பாளர் சிலை பகுதியில் விழா நடைபெற்றது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்தார். காரில் சென்று குழுமியிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தும் வணங்கியும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் வந்தார். அவரும் பார்வையாளர்கள் பகுதிக்கு காரில் சென்று குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முதலமைச்சரை தலைமைச் செயலாளர் இறையன்பு அணிவணக்கம் ஏற்கும் மேடை அருகே வரவேற்றார். இதனையடுத்து கவர்னரை முதலமைச்சர் வரவேற்றார். இதன் பின்னர் கவர்னருக்கு தென்னக தலைமை படைத்தலைவர், முப்படை அதிகாரிகள், போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் கே.சங்கர் ஆகியோரை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து, மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஏற்றிவைத்தார். அப்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர். இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக் கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுகள் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மைத்துறையின் சிறப்பு விருது ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கி பாராட்டினார். பின்னர் விருது பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு, பள்ளி கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பாத் வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, எவர்வின் மெட்ரிக் பள்ளி, முருகா தனுஷ்கோடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முதலிடம் பெற்றன.

இதனையடுத்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கல்பேலியா நடனம், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோலி நடனம், அஸ்ஸாம் பகுரும்பா நடனம் மற்றும் சிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையடுத்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. இதனை பார்வை யாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். இந்த வாகனத்தில் தமிழகம், தமிழ்நாடு சர்ச்சையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வண்ணம் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு என்ற எழுத்துடன்கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து துறை வாரியாக சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வந்தன. காவல்துறை, இளைஞர் நலன், விளையாட்டுதுறை, கூட்டுறவு துறை, பள்ளி கல்வி துறை, மக்கள் நல்வாழ்வு துறை, இந்து சமய அறநிலையத்துறை உட்பட 22 துறைகளை சேர்ந்த அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வந்தன. பொதுமக்கள் இதனை கண்டுகளித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவடைந்தது.

பின்னர் விழா மேடையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வழி அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைத்தனர். சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுமார் 1.22 மணி நேரம் வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சுமார் 1 மணி நேரம் இருவரும் அருகருகே அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி தலையில் தொப்பி அணிந்து வந்திருந்தார். அவரது மனைவி லட்சுமி ரவி அருகில் இருந்தார். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் நிகழ்ச்சியை கண்டு களித்தார். காலை 8.22 மணியில் இருந்து 9.22 மணி வரை அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்தனர். தமிழக சட்டசபையில் கவர்னர் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்துக்கு பிறகு 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் ஒருவருக் கொருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டு அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று நிகழ்ச்சி முடிந்ததும் அதே இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தார். இந்த விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு டி.ராஜா, அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள்.