சென்னை ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற வயதான பெண்மணியிடம் தங்கச்சங்கிலி பறித்துச் சென்ற பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கச்சங்கிலி மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, கொண்டித்தோப்பு, ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் ரத்னா தேவி (வயது 59). கடந்த 17.03.2022 அன்று மதியம் சுமார் 1.10 மணியளவில் ஏழுகிணறு, பட வட்டம்மன் கோயில், பெத்து நாயக்கன் தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் மேற்படி ரத்னாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 1 1/4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ரத்னாதேவி ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர்.
அந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதில் பதிவான எதிரியின் இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து ரத்னாதேவியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மண்ணடி, மரைக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 ¼ சவரன் தங்கச் சங்கிலி மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது பைசல் மீது, கொரட்டூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே 1 சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது பைசல் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.