சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பாஸ்போர்ட் பிரிவு உதயம்: * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்
சென்னை நகரில் ஆவடி புதிய போலீஸ் கமிஷனரேட்டை கடந்த மாதம் முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். புதிய கமிஷனர் அலுவலகத்துக்கான முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடி முதல் போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கமிஷனரேட்டுக்கான ஆயத்தப்பணிகள் படிப்படியாக நடந்தேறி வருகின்றன. விரைவில் ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு, கன்ட்ரோட் ரூம் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர், போக்குவரத்து துணைக்கமிஷனர்கள் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் நுண்ணறிவுப்பிரிவில் பாஸ்போர்ட் பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் புதிய பாஸ்போர்ட் தொடர்பாக போலீஸ் வெரிபிக்கேஷன் பிரிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதனை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். பாஸ்போர்ட் வெரிபிகேஷன் பிரிவில் அதிகாரிகள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது தொடர்பான புதிய உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார். புதிதாக பெறப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் உடனடியாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன. மேலும் பாஸ்போர்ட் தொடர்பான புகார்களுக்கு acisavadicop@gmail.com, -044-26371900 என்ற புதிய இமெயில் மற்றும் தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.