Take a fresh look at your lifestyle.

சென்னை ஆர்ஏ புரம் வீட்டில் இருந்த 3 பழங்கால சிலைகள் மீட்பு

63

சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பழங்கால சாமி சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டனர்.

 

தமிழக கோவில்களில் திருடு போன சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி அவற்றை மீட்டு வருகின்றனர். அதற்காக இந்திய தொல்லியல் துறையில் பழங்கால சிலைகளை பதிவு செய்த நபர்களின் பட்டியலை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சென்னை, ஆர்.ஏ. புரத்தில் ஷோபா துரைராஜன் என்பவர் பெயரில் கோவில்களில் திருடப்பட்ட 6 பழங்கால சிலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், ஐஜி தினகரன் மேற்பார்வையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் முத்துராஜா, மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 7ம் தேதியன்று சென்னை, ஆர்ஏ புரத்தில் உள்ள ஷோபா துரைராஜன் வீட்டுக்கு சென்று இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், தலைமைக்காவலர் ரீகன், சக்திவேல், கண்ணன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆதி கேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீரபத்ரா, மகாதேவி ஆகிய சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அது தொடர்பாக ஷோபாவிடம் விசாரணை நடத்திய போது அவர் கலைப் பொருட்களை சேகரிப்பது தனது பொழுதுபோக்காக இருந்ததாகவும், 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டு அபர்ணா ஆர்ட் கேலரி நடத்தி வந்த தீனதயாளனிடம் இருந்து அந்த சிலைகளை வாங்கியதாக தெரிவித்தார். அதற்கான ஆவணங்களையம் அவர் சமர்ப்பித்தார். ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளின் அடியில் உளுந்தூர்பேட்டை ஆதி கேசவ கோயில் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்த தடயத்தை தொடர்ந்து போலீசார் உளுந்தூர்பேட்டை ஆதி கேசவ கோயிலுக்கு சென்று விசாரித்த போது கடந்த 10/07/2011 அன்று இரவு அந்த சிலைகள் திருடு போயுள்ளதும் சில மர்மநபர்கள் கொள்ளையடித்து, ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் திருடு போனது பற்றிய தகவல் தெரியவந்தது. கோவிலில் கிடைத்த பதிவேடுகளை ஆராய்ந்த குழுவினர், திருடர்கள் திருடிச் சென்ற மூன்று சிலைகளின் புகைப்படங்களையும் கண்டுபிடித்தனர்.

அந்த புகைப்படங்களும் ஷோபா துரைராஜின் வீட்டில் இருந்த சிலைகளின் புகைப்படங்களும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. மேலும் அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் உறுதியானது. அதனையடுத்து 3 சிலை களையும் போலீசார் மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்த பிறகு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளனர்.
கோவிலில் திருடு போன சிலைகளை மீட்ட தனிப்படைக்கு டிஜிபி ஜெயந்த் முரளி பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.