Take a fresh look at your lifestyle.

சென்னை அருகே மாடம்பாக்கத்தில் 600 ஏக்கரில் புதிய வளர்ச்சி பகுதி: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

82

கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று துவங்கியது. முதல் கூட்டத்தை கவர்னர் உரை நிகழ்த்தி துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் இன்றைய கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்கியது.

கவர்னர் தனது உரையில் கூறியிருப்பதாவது: நகரங்களின்‌ திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும்‌ முறைப்படுத்தவும்‌ ஆறு புதிய நகர வளர்ச்சிக்‌ குழுமங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன. சென்னையும்‌ அதைச்‌ சுற்றியுள்ள பகுதிகளும்‌ மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இப்பெரும்‌ நகரத்‌ தொகுப்பின்‌ அடிப்படைத்‌ தேவைகளை நிறைவு செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்‌ வகையில்‌, சென்னைப்‌ பெருநகரின்‌ எல்லை ஐந்து மடங்காக 5,904 சதுர கி.மீ. அளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

சென்னைப்‌ பெருநகரப்‌ பகுதிக்கான போக்குவரத்துத்‌ திட்டங்களைத்‌ தயாரிக்கவும்‌, பல்வேறு துறைகளால்‌ செயல்படுத்தப்படும்‌ போக்குவரத்து அமைப்புகளையும்‌, சேவைகளையும்‌ ஒருங்கிணைத்திடவும்‌, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப்‌ போக்குவரத்துக்‌ குழுமம்‌ 2010 ம்‌ ஆண்டில்‌ அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்படாமல்‌ இருந்த இக்குழுமத்திற்கு, இந்த அரசு புத்துயிர்‌ அளித்துள்ளது. கடந்த நவம்பர்‌ மாதத்தில்‌ இக்குழுமத்தின்‌ முதல்‌ கூட்டம்‌ முதலமைச்சரின்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை, பல்வழிப்‌ போக்குவரத்துத்‌ திட்டம்‌, பெண்களுக்கும்‌, மாணவர்களுக்கும்‌ பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்தல்‌ ஆகியவை மேற்கொள்ளப்படும்‌. சென்னை பெருநகரின்‌ வேகமான வளர்ச்சி நீடித்து நிலைக்கத்தக்கதாக இருக்க வேண்டுமெனில்‌, இந்தப்‌ பெருநகரைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ திட்டமிட்ட வளர்ச்சி அவசியம்‌ என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இந்த வகையில்‌, சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக்கத்தில்‌ 600 ஏக்கர்‌ பரப்பளவில்‌, நிலத்திரட்டு முறையில்‌ புதிய வளர்ச்சிப்‌ பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சிக்‌ குழுமத்தால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நில உரிமையாளர்களின்‌ ஒப்புதலோடு நிலங்களைப்‌ பெற்றுத்‌ திரட்டி, திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு நிலப்‌ பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவற்றை நில வகைப்பாடு செய்து, நில உரிமையாளர்களுக்கு பங்கீடு செய்து வழங்கி, புறநகர்‌ வளர்ச்சிக்கு வித்திடும்‌ பணிகள்‌ விரைவாக நடைபெற்று வருகின்றன. பெரும் பாலான நில உரிமையாளர்கள்‌ மனமுவந்து ஒப்புதல்‌ அளித்துள்ள இப்பணிகள்‌ விரைவில்‌ நிறைவுறும்‌. இதன்‌ அடுத்த கட்டமாக, இதே நிலத்திரட்டு முறையைப்‌ பின்பற்றி, கிழக்கு கடற்கரைச்‌ சாலையை ஒட்டி, மாமல்லபுரம்‌ அருகே புதிய துணை நகரம்‌ ஒன்று அமைக்கப்படும்‌. ஒச்சாலையும்‌ நான்குவழிச்‌ சாலையாகத்‌ தரம்‌ உயர்த்தப் படுவதால்‌, சென்னை பெருநகரப்‌ பகுதியின்‌ அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம்‌ விளங்கும்‌.

பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத, தரமான, பாதுகாப்பான சாலை இணைப்புகளை மாநிலம்‌ முழுவதும்‌ அமைத்திட இந்த அரசு பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகின்றது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 5,582 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 2,263 புதிய பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல்‌ வழங்கி யுள்ளது. மேலும்‌, 560 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 131 தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மாற்றுதல்‌, 142 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புறவழிச்சாலைகள்‌ அமைத்தல்‌, 327 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ எட்டு ரெயில்வே மேம்பாலங்கள்‌ அமைக்கும்‌ புதிய பணிகள்‌ போன்றவை நடப்பாண்டில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ உலகத்தரம்‌ வாய்ந்த திறன்‌ பயிற்சி பெற்று திறமையிலும்‌, தகுதியிலும்‌, சிறந்து விளங்கிட ‘நான்‌ முதல்வன்‌’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. கற்கும்‌ கல்விக்கும்‌, தொழில்துறைகளின்‌ தேவைக்கும்‌ இடையே உள்ள இடைவெளியை நிறைவு செய்து, வேலைவாய்ப்புகளைப்‌ பெற்றுத்தரக்கூடிய திறன்‌ பயிற்சிகளும்‌ தொழில்சார்ந்த பயிற்சிகளும்‌ மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இத்தகைய சீரிய முன்னெடுப்புகளின்‌ மூலம்‌, 3 லட்சம்‌ பொறியியல்‌ கல்லூரி மாணவர்களுக்கு திறன்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படுகின்றன. மேலும்‌, 4.5 லட்சம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி மாணவர்களும்‌ இதன்‌ மூலம்‌ பயனடைவர்‌. கல்லூரிப்‌ படிப்பு முடியும்‌ தருவாயிலேயே மாணவர்களின்‌ கல்வித்‌ தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை உறுதி செய்வதோடு, தொழில்‌ நிறுவனங்களில்‌ பணியாற்ற திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதும்‌ இத்திட்டத்தின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

கிராமப்புரப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கட்டமைப்புகளை மேம்படுத்தி, வாழ்வாதாரத்‌ திட்டங்களின்‌ மூலம்‌ வறுமையை அகற்றிடும்‌ முயற்சிகளில்‌ இந்த அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்துக்‌ கிராமப்புரக்‌ குடியிருப்புப்‌ பகுதிகளிலும்‌ சமமான முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்யும்‌ நோக்கத்துடன்‌, அனைத்து கிராம ‘அண்ணா மறுமலர்ச்சித்‌ திட்டம்‌’ இந்த அரசால்‌ மீண்டும்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2022 23 ஆம்‌ ஆண்டில்‌ மொத்தம்‌ 1155 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 2,544 ஊராட்சிகளில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள்‌ அனைவரும்‌ ஒற்றுமையுடனும்‌ சகோதர உணர்வுடனும்‌ வாழ வேண்டும்‌ என்ற உயரிய நோக்கத்துடன்‌ கலைஞரால் கொண்டுவரப்பட்ட ‘பெரியார்‌ நினைவு சமத்துவபுரம்‌’ திட்டத்தை இந்த அரசு மீட்டெடுத்து வருகின்றது. முதற்கட்டமாக, 149 சமத்துவபுரங்களில்‌ 190 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொண்ட புதுப்பிக்கும்‌ பணிகள்‌ முடிவடையும்‌ தருவாயில்‌ உள்ளன.

அதேபோல்‌, நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, வரும்‌ நான்கு ஆண்டுகளில்‌ 20,990 கி.மீ. நீளமுள்ள நகர்ப்புற சாலைகள்‌ 9,588 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தப்படுமென சென்ற கூட்டத்தொடரில்‌ முதலமைச்சர்‌ அறிவித்தார். இப்பணிகள்‌ விரைவில்‌ முடிக்கப்படும்‌. 53 இடங்களில்‌ தேங்கியுள்ள பழைய கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, உயிரி அகழ்ந்தெடுத்தல்‌ முறையில்‌ அப்புறப்படுத்தி, நிலங்கள்‌ மீட்டெடுக்கப்படவுள்ளன. இதற்காக, அரசு 122 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை, 369 ஏக்கர்‌ நிலங்கள்‌ மீட்டெடுக்கப்பட்டு, பசுமையான பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

மக்களின்‌ குடிநீர்‌ தேவைகளை நிறைவு செய்வதற்காக, 15,734 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 103 கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டங்களுக்கு, உயிர்நீர்‌ இயக்கத்தின்‌ கீழ்‌ அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. மேலும்‌, நகர்ப்புரப்‌ பகுதிகளுக்கு குடிநீர்‌ வழங்கும்‌ பணிகளுக்காக அம்ருத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 3,166 கோடி ரூபாய்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 1.64 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு கவர்னர் கூறினார்.