ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 86 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறி வுப்பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் எஸ்பி ரோகித்னாதன் மேற்பார்வையில் தங்களுக்கு வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனை மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக
கடந்த 2ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகினி தியேட்டர் அருகிலும், மடுவாங்கரை கிண்டி சக்கரபாணிரோடு இல்லம் அருகிலும் டிஎஸ்பி சக்ரவர்த்தி, இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சிக்கியது.
கஞ்சாவை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த அன்புராஜ், 57 மற்றும் சிவா, 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நேற்று காலை
7 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை 3ல் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஜெயபாரதி தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது சுமார் 26 கிலோ எடையுள்ள கஞ்சா சிக்கியது. அதனை கடத்தி வந்த முத்துக்குமார், மதுரையைச் சேர்ந்த மதுராந்தகி, 48 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் மொத்தம் 86 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.