சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள் வைத்திருந்த 7 நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். 76.5 கிலோ கஞ்சா, 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,101 நைட்ரோவிட் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 ஈச்சர் வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன், கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பிரபாகரன் மற்றும் வடசென்னை கூடுதல் கமிஷனர் செந்தில்குமார், இணைக்கமிஷனர் ரம்யாபாரதி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 06.03.2022 மதியம் வ.உ.சி.நகர் ரயில் நிலையம் அருகில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக பையுடன் வந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார், சந்தேகத்தின்பேரில், அவரது பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஹித் மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரோஹித் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல ஆர்.கே.நகர் போலீசார் கடந்த 06.03.2022 ஆர்.கே.நகர், ஐஓசி பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள புதர் அருகில் நைட்ரோவிட் போதை மாத்திரைகள் விற்பனைக்கு எடுத்துச் சென்ற தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் 1,101 நைட்ரோவிட் உடல் வலி நிவாரண மாத்திரைகள்பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள ரமேஷ் (எ) ஜி.எச் ரமேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நியூ ஆவடி ரோடு ஆஸ்பிரியன் கார்டன் சந்திப்பு அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஈச்சர் வேனை நிறுத்தினர். அதில் இருந்து ஒரு நபர் வாகனத்திலிருந்து குதித்து தப்பித்து ஓடி விட்டார். வாகனத்தில் இருந்த மற்ற 2 நபர்களை பிடித்து, வாகனத்தை சோதனை செய்தபோது, அதற்குள் பெருமளவு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து ஈச்சர் வேனில் கஞ்சா கடத்தி வந்த பூந்தமல்லி கண்டோன்ட்மன்ட் பகுதியைச் சேர்ந்த பிரதீப்ராஜ் (29), விழுப்புரம் வரதராஜு (36) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 62 ½ கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஈச்சர் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பிச் சென்ற தேவா (எ) ரமேஷ் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சேத்துப்பட்டு குருசாமி பாலம், மெக்நிக்கல் ரோடு 3வது சந்து அருகே கண்காணிப்புப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஷேக் மொய்தீன் பாட்ஷா (29), ஆந்திரா, ராஜமுந்திரியைச் சேர்ந்த துர்கா பிரசாத் (30) மற்றும் லோகநாதன் துர்கா (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குபின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.