Take a fresh look at your lifestyle.

சென்னையில் 7 நாள் ரெய்டில் 72 பேர் கைது: 58 கஞ்சா வழக்குகள் பதிவு

78

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில் போலீசார் கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs)கள் மேற்கொண்டு வருகிறார். சென்னை நகரில் உள்ள கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 01.04.2022 முதல் 7.04.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 கிலோ 405 கிராம் கஞ்சா, 13 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 9.4 கிராம் மெத்தம்பெட்டமைன், ரொக்கம் ரூ.23,000. 3 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடும்படியாக கடந்த 02.04.2022 அன்று வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அதிகாலை 4.00 மணியளவில் கண்ணன் ரவுண்டனா பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தனர். அப்போது, காரில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7.6 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 12 LSD ஸ்டாம்புகள், 3 செல்போன்கள், மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, கடந்த 04.04.2022 அன்று டி.பி.சத்திரம் போலீசார் அங்கு கஞ்சா விற்பனை செய்த மாணிக்கம், ஜீவானந்தம் (எ) ஜீலியஸ் (33), சுந்தர் (30) ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல கடந்த 6.04.2022 அன்று, எம்.கே.பி.நகர், போலீசார் போதைபொருட்களை வைத்திருந்த கலையரசு, கபீர்அகமது, ரியாஸ் அகமது ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா, 1.8 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 LSD ஸ்டாம்பு மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.