ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் மூன்றாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், 40 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது.
இந்த ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி கடந்த 2016ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7வது ஊதியக் குழுவில் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. எனவே, 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஊதிய முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், 27 ந் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடும் எதுவும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இதனிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அது போல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி என். சிவா, சு. திருநாவுக்கரசர், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். இனிகோ இருதயராஜ், சீ. கதிரவன், அ. சௌந்தரபாண்டியன், ந. தியாகராஜன், செ. ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, அப்துல் சமது, திருச்சி மேயர் மு.அன்பழகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.