சென்னையில் 3 இடங்களில் 49 கிலோ குட்கா ஜர்தா பறிமுதல்: 6 பேர் கைது
49 kg gutka seazed in chennai 3 places
சென்னை பட்டினப்பாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதியில் குட்கா கடத்தி வந்த 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 49 கிலோ குட்கா மற்றும் ஜர்தாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று (22.08.2022) காலை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சந்திப்பு அருகே கண்காணிப்புப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்த அப்சல்தீன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16.5 கிலோ ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, தண்டையார்பேட்டை போலீசார் திருவொற்றியூர் ஐரோடு அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகரன் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7.5 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ. 14,150- மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
வியாசர்பாடி போலீசார் அங்குள்ள நேரு நகர் 1வது தெருவிலுள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வந்த திலீப்குமார், சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ எடை கொண்ட மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் ஜர்தா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.