சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 179 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் சென்னை நகரம் முழுவதும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மேற்பார்வையில் துணைக்கமிஷனர்கள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 1.5.2022 முதல் 7.5.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்கள் கைது. 179 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் குறிப்பிடும்படியாக யானைக்கவுனி போலீசார் கடந்த 1.5.2022 யானைக்கவுனி, தண்ணீர் தொட்டி தெரு அருகே ஜர்தா புகையிலைப்பொருட்களை ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த 175 கிலோ ஜர்தா புகையிலைப் பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.