சென்னையில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை காரில் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து சென்னையில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தும் வருகின்றனர். கடை வீதிகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வருகை தரும் மக்களின் உடைமைகளும், கோயம்பேடு, எழும்பூர் சென்டிரல் ரெயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.