சென்னையில் போதை பாக்கு விற்ற 107 பேர் கைது: 56 கிலோ குட்கா பறிமுதல்
One week raid against Gutkha & Mava 105 cases and 107 persons arrested in chennai
சென்னை, ஜுலை. 25–
சென்னையில் போதை பாக்கு விற்பனை செய்த 107 பேரை போலீசார் கடந்த 7 நாட்களில் கைது செய்து 56 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் அதிரடி சோதனைகள் நடத்துவதற்கு தனிப்படைகள் அமைத்துள்ளார். அந்தந்த காவல் மாவட்ட துணைக்கமிஷனர்களின் தனிப்படைகள் இந்த குட்கா ரெய்டை வாரந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 17.07.2022 முதல் 23.07.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில் குட்கா கடத்தல் தொடர்பாக 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 56.34 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 28.7 கிலோ மாவா, மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மற்றும் 2 மிக்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் குறிப்பிடும்படியாக, அசோக்நகர் போலீசார் அசோக்நகர், ரத்தினம்மாள் 4வது தெருவில் கண்காணித்தபோது அங்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்ற ரவிசங்கர் (23), மலைச்சாமி (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33 கிலோ ஹான்ஸ், விமல், கூலிப் ஆகிய குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆர்.கே. நகர் போலீசார் 22ம் தேதியன்று ஆர்.கே.நகர், மணலி சாலையில் கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர் காவல் குழுவினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் அந்த பையை பார்த்தபோது அதற்குள் மாவா பாக்கெட்டுகள் மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் சீவல் பாக்கு, ஜர்தா, சுண்ணாம்பு, 1 மிக்சி மற்றும் ஜார் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, 21.2 கிலோ எடை கொண்ட மாவா, மாவா தயாரிக்கும் மூலப்பொருடகள் மற்றும் 1 மிக்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல ஆர்.கே.நகர் போலீசார் கடந்த 20ம் தேதியன்று கொருக்குப்பேட்டை, என்.எஸ்.கே. தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன்பு ரகசியமாக மாவா விற்பனை செய்த சுரேஷ் (50), பரத் (எ) பரத்குமார் (21), என்ற சரித்திரி பதிவேடு குற்றவாளி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.9 கிலோ எடை கொண்ட மாவா, ஜர்தா மற்றும் 1 மிக்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.