Take a fresh look at your lifestyle.

சென்னையில் ‘ஜாப் ராக்கெட்’ மோசடி ஆசாமிகளை ரவுண்டு கட்டும் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் போலீஸ்: ஒரே நாளில் 3 கேடிகள் கைது

chennai ccb police arrested 3 job rocket accuseds

109

சென்னை நகரில் ஜாப் ராக்கெட் எனப்படும் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்யும் ஆசாமிகளை விரட்டி விரட்டி கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மோசடிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை ஆட்டையைப் போடுவது இன்னொரு விதம். படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களும், மகனுக்காக வேலை தேடும் பெற்றோரும்தான் இந்த மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கின்றனர். அது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் வேலை வாய்ப்பு மோசடி என்ற தனிப்பிரிவு உள்ளது. கமிஷனர் சங்கர்ஜிவாலின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழியின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. நேற்று இந்த ஜாப் ராக்கெட் தொடர்பாக 3 குற்றவாளிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோதிகுமார்

கள்ளக்குறிச்சியைச்‌ சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘‘சென்னை, புரசைவாக்கம்‌, பிரிக்லின்‌ ரோட்டை சேர்ந்த பரசுராமனின்‌ மகன்களான அசோக்குமார்‌, ஜோதிக் குமார்‌ ஆகியோர்‌ அசோக் மேன்பவர் கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களை மத்திய அரசின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ ஹிந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் நிறுவனத்தின்‌ மாநில தலைவர்‌ மற்றும்‌ கமிஷனர்‌ எனக்‌ கூறிக்கொண்டு பல படித்த இளைஞர்களை ஏமாற்றி ஹிந்துஸ்ன் ஸ்கவுட்ஸ் என்ற மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகச் சொல்லி ஏராளமான இளைஞர்களிடம் ‌ரூ. 2 கோடிக்கு மேல்‌ மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உணவுக்கழகத்தில் தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது போலவும், வேலை கிடைத்தது போலவும் போலி நியன ஆணைகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் விசாரணை நடத்தினர்.

இதில் ஜோதிகுமார்‌ மற்றும்‌ அவரது சகோதரர் ‌அசோக்குமார்‌ ஆகிய இருவரும்‌ கூட்டாக சேர்ந்து கொண்டு அண்ணாநகரில்‌ அசோக்‌ மேன்‌ பவர்‌ கன்சல்டன்சி என்கின்ற பெயரில் ‌
போலி நிறுவனம்‌ நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. மேலும் ரயில்வே துறை இந்திய உணவு கழகம் போன்ற மத்திய அரசு துறைகளில்‌ ஜோதிகுமார்‌, அசோக்குமார்‌ நடத்தி வரும்‌ கன்சல்டன்சியுடன்‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்டது போல்‌ போலி ஒப்பந்தத்தை அரசு

முத்திரைகளை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். அதைக் காட்டி வேலை தேடும்‌ அப்பாவி இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் போன்ற தகவல்கள் தெரியவந்தன. அதனையடுத்து ஜோதிகுமாரை (வயது 34) மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள்‌, வெர்னா கார்‌, மற்றும்‌ பல
போலி ஆவணங்கள்‌ கைப்பற்றப்பட்டன.

ரூ. 1 கோடி மோசடி பலே பெண் சுல்தானாகான்

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். சென்னை தண்டலத்தை சேர்ந்த சுல்தானாகான் (வயது 41) என்பவர் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளிலும், தனியார் நிறுவனங்களான CTS, IBM, Yamaha, Hyundai, Ashok Leyland போன்றவற்றில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கோகுலகிருஷ்ணன்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுல்தான்கான் 34 நபர்களிடம் மத்திய, மாநில அரசு துறைகளிலும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணிநியமன ஆணைகள் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் சுல்தானாகானை கைது செய்தனர்.

ரூ. 5 கோடியை ஏப்பம் விட்ட த.மா. முஸ்லிம் லீக் மாநில செயலாளரின் கூட்டாளி

சென்னை மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 165 நபர்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ரேஷ்மா தாவூத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நந்தினி அவரது கணவர் அருண்சாய்ஜி ஆகிய மூவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு
வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநில அரசுத்துறைகளான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், மின்வாரிய உதவிப்பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் APRO மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி இவர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணைகள் பெற்றுத்தருவதாக ஏமாற்றி ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளனர். அதில் அவர்களுடைய கமிஷன் போக மீதித்தொகையை ரேஷ்மா தாவூத்திடம் கொடுத்துள்ளனர்.

அவர் அப்பணத்தைக் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சென்னை, கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர் நகர், 12-வது தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் கமிஷனர் அலுவகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி விசாரணை நடத்தினார். அதனையடுத்து -நந்தினி மற்றும் அவரது கணவர் அருண்சாய்ஜி, ரேஷ்மா தாவூத் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக்காவலில் சிறையில்
அடைக்கப்பட்டனர்.  இதன் தொடர்ச்சியாக முகமது ஹாசிம் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ரேஷ்மா தாவூத், நந்தினி, அருண்சாய்ஜி ஆகிய மூவருடன் சேர்ந்து 165 நபர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி
நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, மற்றும் பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் போலியாக பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். காணொலி காட்சி மற்றும் நேரடியாகவும் போலியாக நேர்காணல் நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச்சான்றுகளை பெற்று போலியான பணிநியமன ஆணைகளை கொடுத்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஹாசிம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை

அரசு வேலை வாங்கி தருவதாகவும்‌, பல அரசியல்‌ பிரமுகர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அதிகாரிகள்‌ தொடர்பு உள்ளது என்று கூறியும்‌ அவர்களுடன்‌ எடுத்த புகைப்படங்களை காட்டியும்‌ நம்பிக்கையூட்டி ஏமாற்றும்‌ இது போன்ற சமூக விரோதிகளிடம் நம்பி ஏமாற
வேண்டாம்‌ என்று கமிஷனர் சங்கர்ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரில் சிறப்பான முறையில்‌ புலனாய்வு செய்து மோசடி ஆசாமிகளை கண்டறிந்து கைது செய்த காவல்‌ ஆய்வாளர்‌ கலாராணி மற்றும்‌ குழுவினரை கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.