Take a fresh look at your lifestyle.

சென்னையில் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்: கத்தை கத்தையாக 500 ரூபாய், 200 ரூபாய் பறிமுதல்

95

சென்னை, கிண்டி பகுதியில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.36 லட்சம்- மதிப்புள்ள ரூ. 200 மற்றும் ரூ. 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– கடந்த 16ம் தேதியன்று சென்னை, கிண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு நபர் ரூ. 200- கொடுத்து மதுபானம் வாங்கினார். அவர் தந்த நோட்டை பார்த்த போது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. அது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் அடையாறு துணைக்கமிஷனர்  மகேந்திரன் மேற்பார்வையில்  கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கள்ள நோட்டை மாற்ற முயன்ற சென்னை திருவல்லிக்கேணி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த அஜாஸ்கான் (38) என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 200 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இரண்டு இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அஜாஸ்கான் கொடுத்த தகவலின் பேரில், அவரது கூட்டாளி சென்னை, அண்ணாசாலை தவ்லத்கான் தெருவைச் சேர்ந்த அம்ருதின் (36) என்பவர் தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த 92 எண்ணிக்கை கொண்ட ரூ. 200- கள்ள நோட்டு மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

அதனையடுத்து போலீசார் அஜாஸ்கான், அம்ருதீன் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் இந்த கள்ளநோட்டு நெட்ஒர்க்கின் பின்னால் இன்னும் பலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அம்ருதீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிண்டி போலீசார் சென்னை, சிட்லபாக்கம், அண்ணாதெருவைச் சேர்ந்த ஷாஹின்சா (34), காஞ்சிபுரம், உத்திரமேரூரைச் சேர்ந்த பிரபு (32), செங்கல்பட்டு சையது ஜியா உல்லா (28), மாமண்டூர் ராஜி (52) ஆகிய 4 நபர்களை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 36,500- மதிப்புள்ள 200 ரூபாய் கள்ளநோட்டுக்கள் 695 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் 195 பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜி என்பவர் ரகுபதி என்பவருடன் சேர்ந்து ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் கள்ள நோட்டுகளை தயாரித்து தனது கூட்டாளிகளிடம் கொடுத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். ரகுபதி என்பவர் கடந்த 19.03.2022 அன்று பாண்டிச்சேரி, ஓரியன்பேட்டை காவல் நிலையத்தில் கள்ள நோட்டு வைத்திருந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து கள்ளநோட்டுகள், ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன்னிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.