சென்னையில் கடந்த 7 நாட்களில் சிக்கிய 1000 கிலோ குட்கா: 28 பேர் கைது
gudka raid in chennai 1000 kgs seazed
சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா தொடர்பாக நடந்த அதிரடி ரெய்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். சென்னை நகரம் முழுவதும் அந்தந்த துணைக்கமிஷனர் தலைமையில் குட்கா பதுக்கல் நபர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் கடந்த 15.05.2022 முதல் 21.05.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1026 கிலோ 530 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 200 கிராம் மாவா மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, ஆர்.கே.நகர் போலீசார் எழில்நகர், சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு ஆட்டோவில் குட்கா மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (20), கொடுங்கையூர் தங்கபாண்டி (44), ராமர், சபாபதி ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,000 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், ரெமோ, , எம்,டி.எம், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல தேனாம்பேட்டை சீத்தம்மாள் காலனி அருகில் குட்கா பாக்கெட்டுக்கள் விற்பனை செய்த விபான் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8.72 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.