சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கும்பல் கைது: 20 கிலோ பறிமுதல்
ganja sellers 6 persons arrested in chennai
சென்னை, ஜுலை. 27–
சென்னை, துரைப்பாக்கம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து 20.62 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக துரைப்பாக்கம் போலீசார் நேற்று காலை, கொட்டிவாக்கம், இளங்கோ நகர், கெனால் பாலம் அருகில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (எ) மண்டடை சூர்யா (21), துரைப்பாக்கம் ரஞ்சித் (20), பெருங்குடி பரத், விக்னேஷ் (25) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20.5 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல ராயபுரம் போலீசார் நேற்று காலை ராயபுரம், மாடி பூங்காவில், சட்டவிரோதமாக கஞ்சா விற்ற எர்ணாவூர் மோகன் (21), வியாசர்பாடி வினோத் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.