சென்னை நகரில் பைக்ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை நகரில் மெரீனா பீச் சாலை, பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரைச்சாலைகளில் இளைஞர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பைக்ரேசில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. சாலைகளில் இவர்கள் சர் சர் ரென பைக்கில் பறப்பதால் சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சமடைகின்றனர். போலீசார் என்னதான் சாலைகளில் தடுப்புகள் அமைத்து அவர்களது பைக்கின் வேகத்தை குறைக்க முற்பட்டாலும் அதையும் மீறி வாலிபர்கள் பைக்கில் சாகசம் செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்துப் போலீசார் கடந்த வாரம் முதல் சென்னை நகரில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இதே போல வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு மெரீனா சாலைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அது தொடர்பாக போக்குவரத்துப் போலீசார் அடையாறு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு உதவிக்கமிஷனர் ஜவகர் பீட்டர் தலைமையில் நேற்று இரவு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.
அதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை ஆர்கே நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் கொறுக்குப்போட்டைப் பகுதியைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா (வயது 20), சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் முகமது சாதிக் (20), ஏசி மெக்கானிக் ஷாஜகான் (17) மற்றும் பிளஸ்2 மாணவர், ஆஷிக் (வயது 18) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது அடையாறு போக்குவரத்துப்புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதே போல ராயப்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலையில் அதிவேகமாக பைக் ஓட்டியதாக கல்லூரி மாணவர்கள் 14 பேரை போலீசார் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.