Take a fresh look at your lifestyle.

சென்னைப் பெருநகரில் ஒரே நாளில் ரவுடிகள் உள்பட 932 குற்றவாளிகளிடம் நேரில் விசாரணை: * கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை

70

சென்னை நகரில் ஒரே நாளில் 743 ரவுடிகள் உள்பட 932 குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சரித்திர பதிவேடு ரவுடிகள், கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்றவாளிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், 743 சரித்திர பதிவேடு ரவுடிகள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே 2,598 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மேலும் 13 சரித்திர பதிவேடு ரவுடிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளன. மேலும் 22 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 410 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல, கொலை முயற்சி வழக்கு அல்லது 2க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் தகராறு வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 189 குற்றவாளி களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இவ்வழக்குகளில் தொடர்புடைய 151 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலும், 610 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளன. 13 குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டன. ஆக மொத்தம் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு சோதனை யில், சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குககளில் தொடர்புடைய 932 குற்றவாளிகளை நேரில் கண்காணித்தும், 13 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 35 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.