சீனாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் வெப்பம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பு, விமான நிலையங்களில் எடுக்கப்படுகின்ற இந்த நடைமுறைகள் இனிமேல் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக சீனாவில் சராசரியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறிந்து, அவர்களின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந் தோறும் 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள். 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். தினமும் 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியிடமிருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.