சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் தொடர் அதிரடி: செம்பியன் மகாதேவி ஐம்பொன் சிலை வாஷிங்டனில் கண்டுபிடிப்பு
idol wing traced chembiyen mahadevi idol washington musiem
நாகப்பட்டினம் கைலாசநாதர் திருக்கோவிலில் திருடப்பட்ட செம்பியன் மகாதேவி சிலை வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னி அருகில் செம்பியன் மகாதேவி கிராமம் உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் திருக்கோவிலில் 3 1/2 அடி உயரம் உள்ள பல கோடி மதிப்புள்ள செம்பியன் மகாதேவி ஐம்பொன் சிலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அது தொடர்பாக வேளாங்கன்னி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சிலை காணாமல் போனது தொடர்பாக எந்த துப்பும் துலங்காமல் இருந்தது.
அதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி தினகரன், எஸ்பி ரவி ஆகியோர் புதிய கோணத்தில் விசாரணை நடத்தினர். இதில் இந்த சிலையானது கடந்த 1959ம் ஆண்டுக்குப் பிறகு காணாமல் போயுள்ளது என்பதும் தெரியவந்தது. அது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்திருந்த புகாரில், ‘‘நான் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டன் சென்றிருந்தேன். அங்குள்ள Free Gallery of Art மற்றும் Arthur M.Sackler Gallery ஆகிய அருங்காட்சியகங்களை பார்வையிட்டேன். அப்போது அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சோழர் காலத்து பழமையான தெய்வங்களின் சிலைகள் இருந்தன. ஒரு சிலையின் பீடத்தில் ‘‘செம்பியன் மகாதேவி, சோழர் வம்சம், 10ஆம் நூற்றாண்டு, தமிழ்நாடு, இந்தியா’’ என்று பதிவு செய்யப்பட்டிருந்த ஐம்பொன் சிலை எனது கவனத்தை ஈர்த்தது. அது 3 1/2 உயரத்தில் அந்த சிலை இருந்தது. அதன் பிறகு நான் இந்தியா வந்தவுடன் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்துக்கு சென்று அந்த சிலை பற்றி விசாரித்தேன். அங்குள்ள கைலாசநாத சுவாமி சிவன் கோயிலுக்கு சென்று விவரம் கேட்டதில் 1959ம் ஆண்டு அப்போதைய கோவில் நிர்வாகிகளால் அந்த செம்பியன் மகாதேவி சிலை நிறுவப்பட்டிருந்தது. செம்பியன் மகாதேவி கிராம மக்கள் ஆண்டுதோறும், ராணி செம்பியன் மகாதேவி சிலைக்கு பூஜை செய்து வந்துள்ளனர். சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய செயல் அலுவலர் மற்ற உள்ளூர் மக்களுடன் இணைந்து திருடப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே வாஷிங்டனுக்கு இந்த சிலை திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நாகப்பட்டனத்தில் தற்போதுள்ள கைலாசநாதர் கோவிலில் ஒன்றரை அடி கொண்ட மகாதேவியின் சிலை போலியானது என்பது தெரியவந்தது. மேலும் 1929ம் ஆண்டுக்கு முன்பே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கோயிலில் சிலை திருடப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள Freer Gallery of Art 1929 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹகோப் வோர்கி என்பவரிடம் இருந்து இந்த சிலையை வாங்கியுள்ளனர் என்பன போன்ற பரபரப்பு தகவல்களும் சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹகோப் கெவோர்கியன் என்பவர் கடந்த 1962ம் ஆண்டு இறந்தார். யாரிடமிருந்து எப்படி ஹகோப் கெவோர்கியன் சிலையை வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள செம்பியன் மாதேவி சிலையை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் அருள்மிகு செம்பியன் மகாதேவி கைலாசநாதர் கோவிலுக்கு அதனை கொண்டுவர சிலை திருட்டு தடுப்பு பிரிவு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் செம்பியன் மகாதேவி சிலை அருள்மிகு கைலாசநாத சுவாமி கோவிலுக்கு பிரதிஷ்டை செய்து கொண்டுவர சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.