தமிழக சிறைக்கைதிகளுக்கு முதன்முறையாக ஆடியோ புத்தகம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புது முயற்சி மேற்கொண்டு ள்ளார்.
தமிழக சிறைத்துறை இயக்குநராக டிஜிபி அமரேஷ் புஜாரி பதவி ஏற்ற பிறகு அங்கு புது சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்த அமரேஷ் புஜாரி கைதிகளுடன் சரி சமமாக அமர்ந்து உணவு உண்டார். மேலும் சிறையில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்ய சிறைக்காவலர்கள் மற்றும் வார்டன்களுக்கு உடலுடன் ஒட்டிய ‘பாடி கேமராக்கள்’ வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகள் தங்களை சீர்திருத்திக் கொள்ளும் வகையில் ஆடியோ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் சீர்திருத்தம் மற்றும் புத்துணர்வு பெறும் வகையில் அவர்களுக்கு ஆடியோ புத்தகம் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை மத்திய சிறைச்சாலையில் இந்த ஆடியோ புத்தகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கைதிகள் தங்கியிருக்கும் அறைகளில் டிவிக்கள் மூலம் இந்த ஆடியோ புத்தகங்கள் அங்குள்ள டிவியில் ஒளிபரப்பப்படும். அதில் உள்ள விஷயங்கள் கைதிகள் சீர்திருத்தம் பெறும் வகையில் இருக்கும். மதுரையை அடுத்து இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது’’. இவ்வாறு தெரிவித்தார்.