2016ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு போரூர் பகுதியில் வசித்து வந்த 6 மாத பெண் குழந்தையிடம், அதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்த 24 வயது வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய த்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 24 வயது வாலிபரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (29.11.2022) தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 -அபராதமும் விதித்து கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாகப் பாராட்டினர்.