சிறுநீரகம் பாதிப்படைந்த காவலரின் மகனுக்கு காவலர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் திரட்டிய ரூ. 12 லட்சம் நிதி: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 2011ம் ஆண்டு பேட்ச் காவலருடைய மகனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அவரது பேட்ச் காவலர்கள் வசூல் செய்த பணம் ரூ. 12,25,700/-, காவலர் நல நிதியிலிருந்து 61,285/- மற்றும் சமீபத்தில் இறந்த 2003ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் இருவர் குடும்பத்துக்கு, அவரது பேட்ச் காவலர்கள் வசூல் செய்த பணம் ரூ.56,05,458/-, காவலர் நல நிதியிலிருந்து 2,80,273/- ஆகியவற்றை வழங்கினார்.
சென்னை, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் தேவேந்திரன். இவரது மகள் மனீஷா (வயது 12). இவர் கடந்த 5 வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 29.03.2021 அன்று சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு காவல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ. 7.5 லட்சமும், செங்கல்பட்டு, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை விற்று ரூ. 12.5 லட்சம் என மொத்தம் 20 லட்சம் செலவு செய்தனர். இந்நிலையில் தேவேந்திரனின் 2வது மகன் கிஷோர் (வயது 10) என்பவரும் கடந்த 4 வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 1 மாதமாக உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அதற்கு ரூ. 12 லட்சம் வரை செலவாகும் எனவும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதனையடுத்து இம்மாதம் 9ம் தேதியன்று அதே அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக சிறுவன் கிஷோருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்த தமிழகம் முழுவதும் உள்ள 2011-ல் பயிற்சி முடித்த சக காவலர்கள் ‘காக்கி உதவும் கரங்கள்’ என்ற வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் காவலர்கள் ரூ. 12,25,700- நிதி திரட்டி காவலர் தேவேந்திரனுக்கு உதவி செய்ய முன்வந்தனர். அதனை கமிஷனர் சங்கர்ஜிவால் மூலம் அளிக்க முடிவு செய்தனர். அதனையடுத்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் 2011ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் வசூல் செய்த பணம் ரூ.12,25,700 ரொக்கத்தை நேற்று (05.3.2022) தேவேந்திரன் குடும்பத் தினருக்கு வழங்கினார்.
மேலும் அறுவை சிகிச்சை தொகையில் தொகையில் 5 சதவீதமான தொகை ரூ.61,285ஐ காவலர் நல நிதியிலிருந்து கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கி, சிறுவன் கிஷோருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். இதே போல, 2003ம் ஆண்டு பேட்ச் தலைமைக் காவலர் கார்த்திக்கேயன் என்பவர் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, 31.10.2021 அன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார். இவரது 2003ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் ஒருங்கிணைந்து மறைந்த கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காக, தங்களால் இயன்ற நிதியை வழங்கி, ரூ. 28,12,458 வசூல் செய்தனர். மேலும், பூந்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த 2003ம் ஆண்டு பேட்ச் தலைமைக் காவலர் ராஜசேகர் அன்று 16.11.2021 அன்று உயிரிழந்தார். இதே 2003ம் ஆண்டு பேட்ச் சக காவலர்கள் ஒருங்கிணைந்து, மறைந்த தலைமைக் காவலர் ராஜசேகர் குடும்பத்தினருக்கு ரூ. 27,93,000- வசூல் செய்தனர்.
கமிஷனர் சங்கர்ஜிவால் 2003ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் வசூல் செய்த மொத்தம் ரூ. 56,05,458 பணத்தில், மறைந்த தலைமைக் காவலர் கார்த்திக்கேயன் குடும்பத்தினருக்கு பணம் ரூ. 28,12,458, காவலர் நல நிதியிலிருந்து இத்தொகையில் 5% ரூ.1,40,623 வழங்கினார். பின்னர் மறைந்த தலைமைக் காவலர் ராஜசேகர் குடும்பத்தினருக்கு பணம் ரூ. 27,93,000- மற்றும் இத்தொகையில் 5 % காவலர் நல நிதியிலிருந்து ரூ.1,39,650/- வழங்கி, மறைந்த 2 தலைமைக் காவலர்கள் குடும்பத்துக்கும் துறை ரீதியாக கிடைக்க வேண்டிய பணப்பலன்களை விரைவில் பெற்றுத் தருவதாக தெரிவித்து, ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம் ) லோகநாதன் உடனிருந்தார்.