Take a fresh look at your lifestyle.

சிறப்பாக பனியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

police commissioner shankar jiwal rewarded police perosnals

94

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி, ஆளிநர்கள் மற்றும் பொது மக்களை இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

போக்சோ வழக்கில் திறம்பட பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சித்ரா

கடந்த 2018ம் ஆண்டு, சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்த 11 வயது சிறுமியிடம் அப்பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்த வடமாநில வாலிபர், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். அது தொடர்பாக, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த கோவிந்தகுமார் (20) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா (தற்போது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்) மற்றும் நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் ரேவதி மற்றும் காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி கோவிந்தகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்திய எஸ்ஐ, தலைமைக்காவலர்

அண்ணாசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வளராக பணிபுரியும் ரஷித், தலைமைக்காவலர் சரவணன் ஆகிய இருவரும் கடந்த 17.05.2022 அன்று மதியம் அண்ணாசாலை பகுதியில் பணியிலிருந்தனர். அப்போது, பீட்டர்ஸ் ரோடு அண்ணாசாலை சந்திப்பில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது கார் மோதியதில் சாலை தடுப்பு சரிந்து கீழே விழுந்துள்ளது. தகவலறிந்த உதவி ஆய்வாளர் ரஷிக் மற்றும் தலைமைக்காவலர் சரவணன் ஆகிய இருவரும் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த சாலை தடுப்புகளை சரி செய்தும், சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லிகற்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலையில் பயணிக்க முடிந்தது. போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

முதியவரின் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த தன்னார்வலர்

சென்னை, கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன் காலனியில் வசிக்கும் குழந்தைகள் நல தன்னார்வலர் கன்னியாபாபு என்பவர் கடந்த 28.04.2022 அன்று அதிகாலை 1.30 மணியளவில் தனது கணவர் ரங்கபாபு, அவரது 2 மகன்களான லிகித், யோகித் மற்றும் அவரது தங்கை மகன் கிரிதிக் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப் போது, நியூ ஆவடி ரோட்டில் உள்ள மசூதி அருகில் ரோட்டின் ஓரம் ஒரு முதியவர் சாலையில் குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட கன்னியாபாபு அவரது கணவர் மற்றும் மகன்கள் காரிலிருந்து இறங்கி முதியவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். சிறுவர்கள் முதியவர் அருகில் பர்ஸ் இருப்பதை கவனித்து அதை எடுத்து தங்களது பெற்றோரிடம் கொடுத்துள்ளனர். கன்னியாபாபு முதியவரின் முகவரி ஏதும் பர்சில் இருக்கிறதா என தேடிப்பார்த்த போது. அதில் 22,000 பணம் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே மேற்படி பணம் அடங்கிய பார்சை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் காலையில் மீண்டும் கன்னியாபாபு மேற்படி இடத்தில் சுற்றித்திரிந்த அயனாவரத்தைச் சேர்ந்த முதியவர் கமலக்கண்ணன் என்பவரை கண்டுபிடித்து அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மேற்படி ஒப்படைக்கப்பட்ட பணம் இந்த முதியவருக்கு சொந்தமானது என கூறியுள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து ரூ. 22 ஆயிரம் அடங்கிய பணப்பையை அண்ணாநகர் துணை ஆணையாளர் சிவப்பிரசாத் முதியவர் கமலக்கண்ணனிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

மேற்கண்ட சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள், சாலையில் குடிபோதையில் மயங்கி கிடந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தும், ரூ.22 ஆயிரம் அடங்கிய பார்சை எடுத்து பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து முதியவரிடம் ஒப்படைக்க உதவிய தன்னார்வலர் கன்னியாபாபு மற்றும் அவரது மகன்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (24.05.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.