சென்னை, நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 16 பேரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்களை கமிஷனர் சங்கர் ஜிவால் வாரந்தோறும் நேரில் அழைத்து வெகுமதியும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வருகிறார். சென்னை யானைக்கவுனி, மதுராவாயல், வியாசர்பாடி காவல் நிலையங்களில் கடந்த வாரத்தில் காவலர்களும், அதிகாரிகளும் சிறந்த காவல் பணியாற்றி கமிஷனரிடம் பாராட்டு பெற்றனர்.
26.7 கிலோ கஞ்சாவை மடக்கிய யானைக்கவுனி போலீசார்:
சென்னை யானைகவுனி இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், தலைமைக்காவலர்கள் பூபதி, கார்த்திகேயன், சுரேஷ், முதல் நிலைக்காவலர்கள் கமேஷ், பள்ளிகொண்ட பெருமாள், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 22.04.2022 வால்டாக்ஸ் ரோடு, என்எஸ்சி போஸ் சாலை சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரில் கஞ்சா கடத்தி வந்த முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முகமது நௌசத் அலி (35), ஆயிஷா (23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து சுமார் 26.7 கிலோ எடை கொண்ட கஞ்சா, 1 லிட்டர் கஞ்சா ஆயில், 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல கடந்த 30ம் தேதியன்று யானைக்கவுனி பகுதியில் டாடா சுமோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கன்குமார் (41) ஸ்டான்லி (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேருரி சீரு (33) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய TATA Sumo Grandi கார் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் மேற்படி நபர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
ஆப்பிள் ஐ-போனை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர் விமல்
சென்னை, வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக்காவலர் விமல்குமார் கடந்த 23.04.2022 அன்று இரவு வியாசர்பாடி, கணேசபுரம் பாயிண்டில் பணியிலிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் சாலையில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து தலைமைக்காவலரிடம் ஒப்படைத்துள்ளார். தலைமைக்காவலர் விமல்குமார் கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ-போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இரண்டு செக் புக்குகள் இருந்துள்ளது. உடனே செக்புக்கிலிருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி, கைப்பையை தவறவிட்ட பெண்ணின் கணவரை நேரில் வரவழைத்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். கைப்பையை பெற்றுக்கொண்ட பெண்ணின் கணவர் சென்னை போலீசாரை பாராட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சாலையில் சிதறிக்கிடந்த கான்கீரிட் கலவையை அப்புறப்படுத்திய தலைமைக்காவலர்
சென்னை, மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரியும் தலைமைக்காவலர் கார்த்திகேயன் என்பவர் கடந்த 1.05.2022 அன்று மதுரவாயல் மார்கெட் பாயிண்ட் அருகே பணியிலிருந்தார். அப்போது, சாலையில் கான்கீரிட் கலவை சிதறி கிடந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமபடுவதை கண்டு, தலைமைக்காவலர் சிறிதும் தாமதிக்காமல் உடனே சாலையில் சிதறிக்கிடந்த கான்கீரிட் கலவையை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலையில் பயணிக்க முடிந்தது. போக்குவரத்து தலைமைக்காவலரின் இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தேனாம்பேட்டையில் சிக்கிய 10 கிலோ கஞ்சா
தேனாம்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் சக்திவேல், ஆயுதப்படைக்காவலர் சவுந்திரராஜன் ஆகிய இருவரும் கடந்த 26.04.2022 அன்று தேனாம்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் கஞ்சா கடத்தி வந்த கொடுங்கையூர் ஹரி, மண்ணடி உசேன் அலி, ஜெயந்தர்ராஜ் ஆகிய மூவரை கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த மேற்படி 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.