Take a fresh look at your lifestyle.

சிறந்த புலனாய்வு பணி: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணைக்கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

96

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் மற்றும் ஜாப்ராக்கெட் உள்ளிட்ட மோசடி தடுப்புப்பிரிவுகளில் சிறப்பான புலனாய்வு காவல் பணியாற்றிய துணைக்கமிஷனர்கள் மற்றும் போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

இணையத்தில் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8.12 லட்சம் மோசடி செய்த, வெளிமாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை சென்னை சைபர்கிரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் தனது மகளுக்கு கூரியர் அனுப்ப இணையதளத்தில் தேடி ஒரு கூரியர் நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் மேற்படி கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, 2 இணைய தள லிங்க்குகளை அனுப்பி அவரின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 8.12 லட்சம் மோசடி செய்தனர். இது  குறித்து பாதிக்கப்பட்ட நபர் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி அறிவுரையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் கிரண் ஸ்ருதி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் கிருத்திகா மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கலையரசன் தலைமையில் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் புகார்தாரரின் பணத்தை மோசடி செய்த நபர்களின் செல்போன் எண், வங்கி விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாரா சென்று தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டனர். அதனையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட ஷம்ஷாத் அன்சாரி (36), இக்பால் அன்சாரி (26), ஷக்பாஸ் அன்சாரி ஆகிய 3 பேரை கடந்த 19.10.2022 அன்று கைது செய்தனர். பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகளின்படி குற்றவாளிகளை சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

சைபர் குற்ற தலைநகரமான ஜம்தாராவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளை ஜம்தாராவிலேயே வைத்து கைது செய்தது தமிழக காவல்துறையில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு KYC Update Scam மோசடியில் ஈடுபட்ட ஜம்தாராவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் பிஷ்வந்த் மண்டல் மற்றும் பபி மண்டல் ஆகியோரை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு வங்காளத்திற்கு சென்று சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல்துறையில், நடப்பு 2022ம் ஆண்டில் 10 வெளிமாநிலங்களைச் சேர்ந்த 28 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, சுமார் ரூ. 3 கோடி மீட்கப்பட்டு, சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்ட புகார்தாரர்களின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை பெருநகர காவல் சைபர்கிரைம் பிரிவு, இணையதளம் மூலம் பண மோசடி செய்யும் மற்றும் லோன் ஆப் போன்ற ஒருங்கிணைந்த பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளை தீவிர புலன் விசாரணை மூலம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

மேலும், சைபர் குற்றங்கள் குறித்தும், வங்கி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் போன்று பொதுமக்களிடம் பேசி வங்கி விவரங்களை பெற்று பணத்தை அபகரிக்கும் செயல்கள் குறித்தும், குறுந்தகவலில் இணையதள லிங்க் அனுப்பி அதன் மூலம் சைபர் குற்றங்கள் நிகழ்வது குறித்தும், சென்னை பெருநகர காவல்துறை, சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.