காவல் அதிகாரிகள், ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங் களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
1. கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் சுமார் 450 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வெளிமாநில குற்றவாளிகளின் கைரேகைகள் ஒப்பீட்டு பார்க்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 11.08.2016 அன்று காலை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்படி வழக்கு கடந்த 12.04.2022ம் ஆண்டு CBCID விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னை விரல் ரேகைப்பிரிவு காவல் குழுவினர் சம்பவயிடத்தில் கிடைத்த 10 விரல் ரேகைப்பதிவுகளை வைத்து தமிழகத்தில் திருட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை செய்ததில், எந்த விரல் ரேகைகளும் ஒத்துப்போகாததால், விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் மேசையா அருள்ராஜ், வினோத் ஆகியோர் தேசிய விரல்ரேகை பதிவு கூடத்தில் பராமரிக்கப்படும் “National Automated Fingerprint Identification System” (NAFIS) என்ற மென்பொருள் உதவியுடன் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குற்ற வாளிகளின் கைரேகைகளை ஒப்பீட்டு பார்த்ததில், மேற்படி வீட்டில் சுமார் 450 சவரன் தங்கநகைகள் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநில குற்றவாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி வழக்கில் குற்றவாளியை அடையாளம் கண்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
2. மதுரவாயல் பகுதியில் 3 டீக்கடைகளின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது. ரொக்கம் ரூ. 1,140- பறிமுதல்.
சென்னை, வானகரம், கந்தசாமி நகர், 3வது தெருவில் வசித்து வரும் ஜெயராமன், வ/44, என்பவர் ஆலப்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 10.02.2023 அன்று இரவு ஜெயராமன் தனது கடையை பூட்டிவிட்டு மறுநாள் (11.02.2023) காலை வந்து பார்த்த போது மேற்படி டீக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவிலிருந்த பணம் ரூ.10,000/- திருடுபோனது தெரியவந்துள்ளது. இதே போல அதே பகுதியில் மேலும் 2 டீக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடுபோயிருந்தது தெரியவந்துள்ளது. மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்படி டீக்கடைகளின் உரிமையாளர்கள் ஜெயராமன், காளிமுத்து மற்றும் ஜெயராமன் ஆகிய மூவர் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை விரல்ரேகைப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பஞ்சாட்சரம், மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் சுதாகர், முதல் நிலைக்காவலர் தரசதன், காவலர்கள் சக்திவேல், அப்பு ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் காவல் குழுவினர் சம்பவயிடங்களுக்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், சம்பவயிடங்களில் கிடைத்த கைரேகை பதிவுகளை வைத்தும் தீவிர விசாரணை செய்து மேற்படி 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரவாயல் சரவணன், வ/49 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரொக்கம் ரூ.1,140/- பறிமுதல் செய்யப்பட்டது.
3. எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற 3 நபர்கள் கைது.
அண்ணாசாலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் கோட்ராஜ், 16.02.2023 அன்று மாலை எழும்பூர், 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற பணியிலிருந்த போது, அங்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான விசாரணை கைதியிடம், நீதிமன்ற வளாகத்தில் இருந்த 3 நபர்கள் கஞ்சா கொடுக்க முயன்றுள்ளார். இதனை கண்ட மேற்படி முதல் நிலைக்காவலர் திரு.கோட்ராஜ், கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்தும், கஞ்சா கொடுக்க முயன்ற 3 நபர்களை பிடித்து F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
எழும்பூர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1.தனுஷ், வ/20, த/பெ.சீனிவாசன், ஜாம்பஜார், சென்னை 2.விக்னேஷ், வ/22, த/பெ.முருகன் ஜாம்பஜார், சென்னை 3.பிரேம், வ/23, த/பெ.சோமு, திருவல்லிக்கேணி,சென்னை அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
4.2018ம் ஆண்டு T.P சத்திரம் பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை, அண்ணாநகர் கிழக்கு, புது காலனி, 2வது தெரு, வ.உ.சி நகர், பகுதியில் அம்மு, வ/23, க/பெ.சீனிவாசன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 27.08.2018 அன்று காலை அம்முவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் சீனிவாசன் என்பவர் மேற்படி அம்முவை கத்தியால் தாக்கி கொலை இது குறித்து கொலையுண்ட அம்முவின் தயார் சுந்தரி என்பவர் K-6 T.P.சந்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எதிரி சீனிவாசன், வ/34, த/பெ.மாலக்கொண்டையா, வ.உ,சி நகர், புது காலனி, 2வது தெரு, அண்ணாநகர், சென்னை என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை அல்லிக்குளம், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், K-6 T.P.சந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் காவலர் திருமதி.K.ராஜலெட்சுமி முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 15.02.2023 தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்படி வழக்கில் எதிரி சீனிவாசன், வ/39, த/பெ.மாலக் கொண்டையா என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
5.ஐஸ் அவுஸ் ஆதாய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவரை 3 ஆண்டுகள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைத்து கண்காணிக்கவும் மற்ற 3 இளஞ்சிறார்களை 1 வருடம் கண்காணிக்க இளஞ்சிறார் நீதிகுழுமம் உத்தரவு.
சென்னை, ஐஸ்அவுஸ், நடேசன் ரோட்டில் உள்ள தீர்த்தபாளிஸ்வரர் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்த பாபு, வ/51, த/பெ.தனசேகரன் என்பவர் கடந்த 17.06.2021 அன்று கோவில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அங்கு உண்டியலை உடைத்து திருடுவதற்காக வந்த 4 சிறுவர்களை தடுத்த போது, 4 நபர்களும் மேற்படி பாபுவை இரும்பு ராடால் தாக்கிவிட்டு அவரது செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இரத்த காயமடைந்த பாபு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது குறித்து D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி ஆதாய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 இளஞ்சிறார்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை 12வது பெருநகர குற்றவியல் இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் நடைபெற்று வந்த நிலையில், D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலர் திரு.M.பிரகாஷ் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 16.02.2023 தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவரை 3 ஆண்டுகள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைத்து கண்காணிக்கவும் மற்ற 3 இளஞ்சிறார்களின் நடவடிக்கைகளை 1 வருடம் கண்காணிக்க கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
சிறப்பாக பணிபுரிந்த விரல் ரேகை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பஞ்சாட்சரம் உட்பட 11 காவல் அதிகாரிகள் மற்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (18.02.2023) நேரில் வரவழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.