சித்தா, ஆயுர்வேதா, யுனானி பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இந்திய மருத்துவம் ஓமியோபதி மருத்துவமனை வளாகத்தில், 2022 23ம் கல்வியாண்டிற்கான பட்ட படிப்பு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, பின்னர் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட மேற் படிப்பிற்கான கலந்தாய்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்யும் பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன் பின்பு நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள், 26 சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் என மொத்தம் 1940 இடங்கள் உள்ளது. சித்தா மருத்துவப் பரிவுக்கு 626 இடங்கள், ஆயுர்வேதா மருத்துவப் பரிவுக்கு 361 இடங்கள், யுனானி மருத்துவப் பரிவுக்கு 51 இடங்கள், ஓமியோபதி மருத்துவப் பரிவுக்கு 902 இடங்கள் உள்ளது. அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டிற்காக 2756 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 2573 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580 ஆகும். நிர்வாக ஒதுக்கீட்டிற்காக 878 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 812 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 474 ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக 752 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 707 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 511 ஆகும். 2022 2023 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (மருந்து பகுப்பாய்வு கூடம்) பிரிவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்வதற்கான பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 5 தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.