Take a fresh look at your lifestyle.

சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

81

 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1- 2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ், ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து, ‘டி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா, ‘இ’ பிரிவில் ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான், ‘எப்’ பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, ‘ஜி’ பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன், ‘எச்’ பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று லுசைல் ஜகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியாவை சந்தித்தது.

உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா, 51-வது இடத்தில் இருக்கும் சவுதி அரேபியாவை எளிதில் வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த அணியின் ஆட்டம் ஆரம்பத்தில் அற்புதமாக இருந்தது. தாக்குதல் பாணியை கையாண்ட அர்ஜென்டினா அணிக்கு 10-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கார்னர் பகுதியில் இருந்து சக வீரர் கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை தலையால் முட்ட முயற்சித்த அர்ஜென்டினா வீரர் பேரட்ஸ்சை சவுதி அரேபியா வீரர் சாத் அப்துல் ஹமீத் கீழே தள்ளிவிட்டதுடன் அவர் மீது விழுந்து அமுக்கினார். இதனை வீடியோ நடுவர் உதவியுடன் ஆய்வு செய்த நடுவர் பெனால்டி வழங்கினார். அந்த வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி கச்சிதமாக பயன்படுத்தி கோலாக்கினார். சர்வதேச போட்டியில் மெஸ்சியின் 92-வது கோல் இதுவாகும்.

இதையடுத்து மெஸ்சி ஒரு முறையும், லாட்ரோ மார்டினஸ் 2 முறையும் பந்தை கோல் வலைக்குள் அனுப்பினாலும் அது ‘ஆப்-சைடு’ என்பதால் கோல் இல்லை என்று நடுவரால் மறுக்கப்பட்டது. முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் சவுதி அரேபியா அணியினர் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை.

ஆனால் 2-வது பாதியில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. அடிபட்ட வேங்கை போல ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தில் குதித்த சவுதி அரேபியா, அர்ஜென்டினாவின் தடுப்பு அரணை உடைத்து அவர்களது எல்லைக்குள் எளிதில் ஊடுருவினர். அந்த அணி வீரர்கள் சாலே அல்ஷெரி 48-வது நிமிடத்திலும், சலேம் அல்டாசாரி 53-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து பந்தை கோல் வலைக்குள் திணித்து, அர்ஜென்டினாவை திகைக்க வைத்தனர். இதனால் சவுதி அரேபியா அணி 2 -1 என்ற கோல் கணக்கில் முன்னிலை கண்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர அர்ஜென்டினா அணியினர் இறுதிநிமிடம் வரை கடுமையாக போராடினார்கள். ஆனால் சவுதி அரேபியாவின் தடுப்பு ஆட்டக்காரர்களும், கோல்கீப்பர் முகமது அல் ஒவைஸ்சும் அபாரமாக செயல்பட்டு அவர்களது முயற்சிகளை முறியடித்தனர். கடைசி நேரத்தில் மெஸ்சி, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் கோலை நோக்கி அதிரடியாக அடித்த பந்தை சவுதி அரேபியா கோல்கீப்பர் முகமது அல் ஒவைஸ் பிரமாதமாக தடுத்தார். இதற்கு மத்தியில் முரட்டுதனமான செயல்பாடு காரணமாக கோல் கீப்பர் உள்பட 6 சவுதி அரேபியா வீரர்கள் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

முடிவில் சவுதி அரேபியா அணி 2- 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. அத்துடன் தொடர்ச்சியாக 36 ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத அர்ஜென்டினாவின் வீறுநடைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. உலக கோப்பையில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த சவுதி அரேபியா வீரர்கள் மட்டுமின்றி அந்த அணியின் ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அர்ஜென்டினா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு கலைந்து சென்றனர்.

உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருக்கும் அர்ஜென்டினா அணி, இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அந்த அணி தனது அடுத்த 2 ஆட்டங்களில் மெக்சிகோ (வருகிற 26-ந் தேதி), போலந்து (30-ந் தேதி) ஆகிய அணிகளை வென்றால் தான் 2-வது சுற்றுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.